
ராஜஸ்தானில் உள்ள கரௌலி நகரில், இஸ்லாமியர்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தானில் புத்தாண்டாக கொண்டாடப்படும் நவ சம்வத்ஸர் விழாவை ஒட்டி, மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அந்தப் பகுதியில் இந்து – முஸ்லிம் மக்களிடையே மோதல் வெடித்து, அது கலவரமாக மாறியது. இதில் நான்கு போலீஸார் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.இந்த கலவரத்தில் அந்தப் பகுதியில் ஏராளமான கடைகள் எரிக்கப்பட்டன. அப்போது, சுற்றிலும் வீடுகள் எரிந்துகொண்டிருக்க காவலர் ஒருவர் குழந்தை ஒன்றை துணியால் சுற்றி வாரி அணைத்தபடி நெருப்பிலிருந்து மீட்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.இந்த நிலையில், போலீஸ் அதிகாரி சுகிர்தி மாதவ் மிஸ்ரா என்பவர் இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவையும், புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். “ராஜஸ்தான் போலீஸ் நேத்ரேஷ் சர்மா என்பவர் விலைமதிப்பற்ற ஒரு உயிரை காப்பாற்றியிருக்கிறார். இந்த ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு அர்த்தமுள்ளது” என பதிவிட்டிருக்கிறார்.