
பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் டிம் லாக்ஸ் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து 1400 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்து தென்கிழக்கு உக்ரைனில் தவித்து வந்த சிங்கத்தையும் ஓநாயையும் மீட்டுள்ளனர்.உக்ரைனில் போர் நிலவி வருவதால் அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி குடிபெயர்ந்து செல்கின்றனர். இந்நிலையில் தென்கிழக்கு உக்ரைனில் உள்ள மூடிய உயிரியல் பூங்கா ஒன்றில் சிம்பா என்ற சிங்கமும் மற்றும் அகேலா என்ற ஓநாயும் தவித்து வந்தன. இதையறிந்த பிரிட்டிஷ் முன்னாள் ராணுவ வீரரான டிம் லாக்ஸ் என்பவர் அவரது இரண்டு நண்பர்களுடன் இணைந்து சிம்பாவையும் அகேலாவையும் மீட்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து 1400 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்து தென்கிழக்கு உக்ரைனில் தவித்து வைத்த இரண்டு விலங்குகளையும் கடந்த மார்ச் 19ம் தேதி மீட்டனர்.தற்போது சிம்பா மற்றும் அகேலா ஆகிய இருவிலங்குகளும் ருமேனியாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து இருவிலங்குகளின் தற்போதைய நிலையைப் பற்றி பதிவிட்ட அவர், “ருமேனியாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் இருந்து நாங்கள் கேள்விப்பட்டோம், சிம்பா மற்றும் அகேலா இருவரும் நன்றாக உள்ளனர் என்பதைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட பயணத்திற்குப் பிறகு இருவரும் நிறைய சாப்பிட்டு, குடித்து, சிறிது நேரம் இளைப்பாறுகிறார்கள்” என்று கூறினார்.மேலும், “எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் நன்றாக ஓய்வெடுத்து, அடுத்த பணிக்காக காத்திருக்கிறோம். ஓய்வெடுக்கும் இந்நேரத்தில் எங்கள் வாகனங்கள் மற்றும் கருவிகளை மறுசீரமைத்துக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில் கூட தங்கள் உயிரைப் பணயம் வைத்து விலங்குகளைக் காப்பாற்றிய இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.