உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.!

புதுடெல்லி: கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சையத் நசீர் உசேன், உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை மாநிலங்களவையில் எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:- உயர் நீதிமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு பிரிவு 348(1) (அ) கூறுகிறது. அதேநேரத்தில், ஜனாதிபதியின் முந்தைய ஒப்புதலுடன் இந்தி மொழி பயன்படுத்துவதை அங்கீகரிக்கலாம் அல்லது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வேறு எந்த மொழியையும் உயர் நீதிமன்றம் நடவடிக்கைக்கு அங்கீகரிக்கலாம் என 348-ன் உட்பிரிவு 2 கூறுகிறது. ஆனால் உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலம் அல்லாத வேறு எந்த மொழிகளையும் பயன்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளுக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் என்று 21-95-1965-ம் நாளைய மந்திரிசபையின் குழு, நிபந்தனை விதித்துள்ளது. இதற்கிடையே, 1950-ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் 348-வது பிரிவின் உரிய ஷரத்துகளின் கீழ் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் இந்தி வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு உத்தரபிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் 1969-ம் ஆண்டும், மத்திய பிரதேசத்தில் 1971-ம் ஆண்டும், பீகாரில் 1972-ம் ஆண்டும் இந்தி வழக்காடு மொழியாக இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டது. தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கார், கொல்கத்தா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதி கேட்டன. இதற்கான முன்மொழிவுகளை இந்திய அரசு பெற்றது. இதுகுறித்து இந்திய தலைமை நீதிபதியிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. உரிய விவாதங்களுக்குப் பிறகு, அந்த முன்மொழிவுகளை ஏற்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதன்பிறகும் அதனை மறு ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு மற்றொரு கோரிக்கையை முன்வைத்தது. இதற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. முந்தைய முடிவுகளே மீண்டும் வலியுறுத்தப்பட்டது. சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ், இந்திய பார் கவுன்சில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் ‘பாரதிய பாஷாசமிதி’யை அமைத்துள்ளது. சட்டப்பூர்வ விஷயங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் நோக்கத்துக்காக அனைத்து இந்திய மொழிகளுக்கும் நெருக்கமான, ஒரு பொதுவான சொற்களஞ்சியத்தை இந்த குழு உருவாக்குகிறது. மேலும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமன்றத்துறையானது இந்தியில் 65 ஆயிரம் சொற்களைக் கொண்ட சட்டப்பூர்வ சொற்களஞ்சியத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், அதை பொது தளத்தில் தேடக்கூடிய வடிவத்தில் அனைவரும் பயன்படுத்துவதற்கும் தயார் செய்துள்ளது. இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *