
பகுஜன் சமாஜ் கட்சி தலித் மற்றும் இஸ்லாமிய மக்களின் வாக்குகளை மட்டும் பெறவில்லை, பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் சமூகத்தினரின் வாக்குகளையும் பெற்றுள்ளது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் லக்கிம்பூர்கெரி உள்ளிட்ட தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
ஏழாம் கட்ட தேர்தலானது மார்ச் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, எல்லாவற்றிற்கும் காலம்தான் பதில் சொல்லும் என்றும், ஒருவேளை பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலித் மற்றும் இஸ்லாமிய மக்களின் வாக்குகளை மட்டும் பெறவில்லை, பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் சமூகத்தினரின் வாக்குகளையும் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமித்ஷா சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “தலித் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி பிரிப்பது பாஜகவை பாதிக்குமா?” என கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அமித்ஷா
பகுஜன் சமாஜ் கட்சி பாஜ கா வை பாதிக்குமா அல்லது சாதகமாக அமையுமா என தெரியாது என்று பதிலளித்துள்ளார்.

இது வெற்றிபெறும் இடங்களை பொறுத்தது என்றும் அவைதான் சாதக பாதகங்களை தீர்மானிக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், “ஆனால் மக்கள் மத்தியில் மாயாவதியின் தாக்கம் குறையவில்லை” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் குறித்த அமித்ஷாவின் மதிப்பீட்டு அவரின் பெருந்தன்மை என்று மாயாவதி கூறியுள்ளார்.
நடப்பு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறும் கட்சி 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது