
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இவ்வழக்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணைக்காக மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார், மாணவியின் பெற்றோருக்கு பலமுறை சம்மன் அனுப்பினர்.இருப்பினும் அவர்கள், செல்போனை ஒப்படைக்க மறுத்து வந்தனர். இதனால் விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது, மாணவி ஸ்ரீமதியின் செல்போனை உடனே சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க வேண்டுமென அவரது பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 15.12.2022 அன்று உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சென்ற ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது மகள் பயன்படுத்தி வந்த கைபேசியை, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார். பின்னர், செல்போன் ஒப்படைக்கப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டை போலீசாரிடம் இருந்து ஸ்ரீமதியின் தாய் செல்வி பெற்றுக்கொண்டார். இவ்வழக்கு வருகிற 1-ந் தேதி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீமதியின் தாய் செல்வி நிருபர்களிடம் கூறுகையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீது நம்பிக்கை இல்லாததால் ஸ்ரீமதி பயன்படுத்திய கைபேசியை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்தோம். ஆனால் நீதிபதி கூறிய அறிவுரைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கைபேசியை ஒப்படைத்து விட்டேன். ஸ்ரீமதி பயன்படுத்திய கைபோங ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி பலமுறை சம்மன்களை வழங்கி சி.பி.சி.ஐ.டி. போலீசார் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இப்போது அவர்கள் கேட்ட கைபேசியை நாங்கள் ஒப்படைக்கிறோம். நாங்கள் கேட்ட தகவல்களை அவர்கள் எங்களுக்கு தர வேண்டும். ஸ்ரீமதி மரணத்தில் கொலையாளிகளை யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்றும் ஸ்ரீமதியின் தாயார் செல்வி தெரிவித்தார்.