
உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காணாமல் போன தலித் பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதாக, உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.அவரது கழுத்து எழும்பு உடைக்கப்பட்டிருப்பதாக, உடற்கூராய்வில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரண்டு மாதங்களுக்கு முன்பு, உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் காணாமல் போன நிலையில், அவரது அழுகிய உடல் வியாழக்கிழமை, காலை கண்டெடுக்கப்பட்டது.பலியான பெண்ணின் தாய், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பதேஷ் பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங்குக்கு இந்த கொலையின் பின்னணியில் இருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில்தான், பலியான பெண்ணின் உடல், ஒரு போர்வையில் சுற்றப்பட்டு, கழிவுநீர் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.உன்னாவ் பகுதியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்ப காணாமல் போனார். அவரைக் காணவில்லை என்று அவரதுதாய் டிசம்பர் 8ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால், அது குறித்து காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனவரி 24ஆம் தேதி தனது மகளைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் கார் முன்பு விழுந்து தாய் தற்கொலைக்கு முயன்றார். அதன்பிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.அதன்பிறகுதான், ரஜோல் சிங் கைது செய்யப்பட்டார். எனினும், பெண்ணின் உடலை காவலர்கள் தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.