
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலத்திருமாணிக்கம் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் ஒய்.மோனிஷ்ராஜ் என்பவர் ஜம்பிங் ஜாக்ஸ் என்ற பிரிவில் கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார்.இச்சாதனையை மதுரை டேக்வாண்டோ அகாடமி கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று ஆன்லைன் மூலம் ஒருங்கிணைத்து நடத்தியது.வெற்றி பெற்றவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் சான்றிதழ் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் பிரபு அலெக்ஸாண்டர் மற்றும் சக ஆசிரியர்களான கார்த்திக்பாண்டி, பாலமுருகன், ராஜேஷ்குமார் ஆகியோர் அம்மாணவனை பாராட்டியதோடு, பதக்கமும், பரிசும் வழங்கினர்.இந்நிகழ்வில் பொதுமக்களும், பெற்றோரும் கலந்து கொண்டனர். அரசுப்பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை புரிந்தது அவ்வூர் மக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.