உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் வலுக்கும் மோதல்..!

கீவ்,சோவியத் ஒன்றியம் பிளவுப் பட்டதற்கு பிறகு தனிநாடாக உருவான உக்ரைனை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்து கொள்ள ரஷிய முயன்று வருவதால் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ள ரஷியா, எந்த நேரத்திலும் உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது.அதே வேளையில் போர் பயிற்சிக்காகவே எல்லையில் படைகளை குவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைகள் பயிற்சியை முடித்து முகாம்களுக்கு திரும்பி விட்டதாகவும் ரஷியா கூறி வருகிறது.ஆனால் ரஷியா கூறுவதில் உண்மையில்லை எனவும், அந்த நாடு உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முழு வீச்சில் தயாராகி வருவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.இதற்கிடையில் ரஷியாவுடன் அதிகரித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டன்ட்ஸ்க் மாகாணத்தில் தனிநாடு கோரி போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.இந்த மாகாணத்தின் ஒரு பகுதி அரசின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

இதை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வரும் போர்நிறுத்தத்தை உக்ரைன் மீறிவிட்டதாக ரஷியா குற்றம் சாட்டியது.இதனிடையே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது உக்ரைன் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், ராணுவத்தின் பீரங்கி குண்டு வீச்சில் பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்ததாகவும் பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதை தொடர்ந்து பிரிவினைவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை கூட்டம் கூட்டமாக வெளியேற்றி வருகின்றனர். அவர்களை பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் ரஷியாவுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுஒருபுறமிருக்க நேற்று லுஹான்ஸ்க் நகரில் உள்ள எரிவாயு குழாய்களில் அடுத்தடுத்து பயங்கர வெடிப்பு நேரிட்டது. இதனால் டன்ட்ஸ்க் மாகாணத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ரஷியா வேண்டுமென்றே டன்ட்ஸ்க் மாகாணத்தில் பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்க நாடகமாடி வருவதாக குற்றம் சாட்டியது.இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “உக்ரைன் மீது படையெடுக்க புதின் ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அதை நம்புவதற்கு காரணம் உள்ளது. வரும் வாரத்தில் அல்லது அதற்கு முன்பாகவே தாக்குதல் தொடங்கலாம். 28 லட்சம் அப்பாவி மக்கள் வசிக்கும் உக்ரைனின் தலைநகரான கீவை அவர்கள் முதலில் குறிவைப்பார்கள்” என்றார்.அதே சமயம் உக்ரைன் விவகாரம் தொடர்பாக வருகிற 24-ந்தேதி அமெரிக்கா- ரஷியா இடையே வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் சந்திப்பு நடைபெறும் என தெரிவித்த ஜோ பைடன் சந்திப்புக்கு முன்பாக ரஷியா போரை தேர்வு செய்தால் அந்த நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனவும் எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *