
புதுடெல்லி,
ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும், இன்னும் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய விமானப்படை விமானங்களும் இந்த மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. விமானப்படையின் சி.17 ரக விமானங்கள் தொடர்ந்து இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து அழைத்து வருகிறது.
இந்த நிலையில், இதுவரை 21,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாகவும், மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 63 விமானங்களில் 13,ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியதாகவும், கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனில் சிக்கி இருந்த 804 தமிழக மாணவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 360 தமிழக மாணவர்கள் தாயகம் வந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு பணிகளின் தொடர்ச்சியாக 11 விமானங்களில் 2,200-க்கு மேற்பட்டோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாயகம் வந்து சேர்வார்கள் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.