
ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 20 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜ வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 40 வார்டுகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி,காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாதக, சமக என பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் திமுக ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியோடு தேர்லை சந்திக்கிறது.

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜ கூடுதல் சீட் கேட்டு முரண்டு பிடித்ததால் கூட்டணி உடைந்து தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது. பாஜ வெளியேறியதை அதிமுகவினர் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தேர்தல் வெற்றி மூலம் அதிமுகவுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும் என்று பாஜவினர் சவால் விடுத்து வந்தனர்.இதனிடையே தனித்து போட்டியிடும் பாஜ சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 20 வார்டுகளுக்கான வேட்பாளர் பெயர் மட்டுமே பட்டியலில் உள்ளது. மீதமுள்ள 40 வார்டுகளிலும் போட்டியிட ஆட்கள் இல்லாததால் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நாட்டில் 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளோம் என்று பெருமை பேசிவரும் பாஜவினர் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பாக மாநகர பகுதிகளில் கூட அனைத்து வார்டுகளிலும் முழுமையாக ஆட்களை நிறுத்த கூட முடியாத நிலையில் தான் அக்கட்சி உள்ளது என்பதை பாஜ தலைமை புரிந்து கொள்ளவேண்டும் என்று அதிமுகவினர் கிண்டலடிக்கின்றனர். ஆனால் அதே வேளையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது முதல்கட்ட பட்டியல் தான் மீதமுள்ள வார்டுகளுக்கு ஆட்களை நிறுத்துவது தொடர்பாக பேசி வருவதாக பாஜவினர் கூறியுள்ளனர்.