
டெல்லி : தேர்தலின் போது இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் எதிர்தரப்பில் சேர்க்குமாறு, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.’தேர்தல் பிரசாரங்களின் போது பல்வேறு கட்சிகளும் இலவசங்களை அறிவிக்கின்றன. வெற்றி பெற்ற பின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லாமல் மாநில அரசுகள் திணறுகின்றன’ என, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இலவச அறிவிப்புகள் பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்தது.இந்த வழக்கில், தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைகள் வெவ்வேறாக உள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் என்பது நிச்சயம் பொருந்தாது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்ப மாநில அரசுகள் திட்டங்களை அறிவிக்கின்றன. இதை இலவசங்களாக கருத முடியாது.வருமானம், அந்தஸ்து, வசதி வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், சமூக ஒழுங்கு மற்றும் பொருளாதார நீதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. எனவே, தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்க்கும் வழக்கில் தங்களை எதிர்தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.