இலங்கை பொருளாதார நெருக்கடி: உச்சத்துக்கு சென்ற அத்தியாவசிய பொருட்களின் விலை – மக்கள் பரிதவிப்பு..!

இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது.இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நாளாந்தம் வீதிகளிலும், வர்த்தக நிலையங்களிலும், வரிசைகளில் காத்திருப்பதை காண முடிகின்றது.உணவுப் பொருட்கள் முதல் சமையல் எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.அவ்வாறு பொருட்கள் சந்தையில் இருந்தாலும், அதன் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளது.இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி செய்த 1970ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் பஞ்சம் நிலவியதாக கூறப்பட்டாலும், அதை விடவும் பாரிய நெருக்கடிகளை இன்று மக்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.இலங்கை முழுவதும் உள்ள சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையினால், பெருமளவானோர் உரிய வகையில் உணவு உட்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.விறகு அடுப்புக்களின் சமையலை முன்னெடுக்கும் உணவகங்கள் மாத்திரமே திறந்திருப்பதை காண முடிவதுடன், எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ள சில உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சமையல் எரிவாயு இன்றைய தினத்தில் கிடைக்காத பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.அத்துடன், சிறு தொழிலாக வீடுகளிலிருந்து உணவு வகைகளை செய்து, தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து சென்ற எண்ணிக்கை கூற முடியாதளவு சிறு தொழிலாளர்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.சமையல் எரிவாயு விநியோகத்தை லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே, உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள எரிவாயுவிற்கான பணம் செலுத்தப்படாமையினால், எரிவாயு கொண்டு வந்த கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன.இந்த நிலையில், எரிவாயு கப்பல்களுக்கான பணத்தை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு அறிவித்தது.இதன்படி, இன்று முதல் எரிவாயு வழமை போன்று விநியோகிக்கப்படும் என கூறப்படுகின்றது.அதேவேளை, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் (மார்ச் 17) வாகனங்கள் வரிசையில் தரித்து நிற்பதை காண முடிகிறது.பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், எரிபொருளை நிரப்புவதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.வாகனங்கள் வரிசையில் தரித்திருக்கும் அதேவேளை, மறுபுறத்தில் கொள்கலன்களை கையில் ஏந்தியவாறு மக்களும் வரிசையில் நின்றுக்கொண்டிருக்கின்றனர்.எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சுமார் இரண்டு மணிநேரம் வரிசையில் காத்திருந்த முச்சக்கரவண்டி சாரதியான சுனில், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.”எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இந்த இடத்தில் காத்திருக்கின்றேன். இன்னும் இல்லை. அது தான் பிரச்னை. மாற்றமொன்றை செய்ய வேண்டி ஏற்படும். மாற்றத்தை ஏற்படுத்தவே வழங்கினோம். மீண்டுமொரு மாற்றத்தை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை குறித்து பார்க்கும் போது, எதிர்கால சந்ததி தொடர்பில் கவலையாக இருக்கின்றது” என சுனில் குறிப்பிட்டார்.”எரிபொருளை பெற்றுக்கொண்டு, மறுபுறம் பார்க்கும் போது, மின்சாரம் இல்லை. மின்சாரம் வரும் போது, எரிபொருள் வரிசை மீண்டும். எதிர்கால சந்ததி குறித்து இனி சிந்தித்து பார்க்கவே முடியாது. அனைத்துக்கும் வரிசைகள். இப்படி இருந்தால், நாடு நாசம்” என எரிபொருளை நிரப்புவதற்காக காத்திருந்த முச்சக்கரவண்டி சாரதியான ஜயவர்தன கூறுகின்றார்.இதேவேளை, இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்து, நாளாந்தம் பல மணிநேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றது.எரிபொருள் உற்பத்திக்கு தேவையான டீசல் போதியளவு கிடைக்காமையினால், மின்சாரம் நாளாந்தம் துண்டிக்கப்பட்டு வருகின்றது.இதனால், பெருமளவானோர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மின்சாரம் துண்டிக்கப்படுகின்றமையினால், வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.மின்சாரம் துண்டிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில், குறித்த நிறுவனங்கள் மின் பிறப்பாக்கிகளை (Generator) கொண்டு மின்சாரத்தை பெற்றுக்கொள்வது வழமையான விடயம் என்ற நிலையில், நாட்டில் நிலவும் டீசலுக்கான தட்டுப்பாடு காரணமாக மின்பிறப்பாக்கிகளை இயக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இதனால், தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இலங்கையில் தற்போது காணப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல்:2021ம் ஆண்டு மார்ச் மாத விலைப்பட்டியலுடன் ஒப்பிடுகையில், 115 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை தற்போது 190 முதல் 210 ரூபா வரை அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 93 ரூபாவாக காணப்பட்ட சிவப்பு அரிசியின் விலை, தற்போது 175 முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 91 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மா, இன்று 170 ரூபா முதல் 220 ரூபா வரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.இதேவேளை, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் சமையல் எரிவாயுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதுடன், கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விலைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது.இலங்கையில் வரலாற்றில் என்றுமே எதிர்கொள்ளாத பொருளாதார நெருக்கடியை இன்று சந்தித்து வருகின்ற நிலையில், இலங்கை வாழ் மக்கள் முழுமையாகவே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *