இலங்கையில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பு மூலம் நாட்டின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரம சிங்க தேர்வு.!

கொழும்பு: இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.வேட்பு மனு தாக்கல் நேற்று செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை காலை 10.20 மணியளவில் நடைபெற்றது.வாக்குப்பதிவு தொடங்கியதும் முதலாவது வாக்கினை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பதிவு செய்தார். இரண்டாவது வாக்கினை அதிபர் ரணில் விக்ரமசிங்க பதிவு செய்தார்.தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை பதிவு செய்ததை அடுத்து, அதிபர் வேட்பாளர்களான எம்.பி. டலஸ் அழகம்பெரும, அனுர குமார ஆகியோர் முறையே 42 ஆவதாகவும், 99 ஆவதாகவும் அவர்களது வாக்குகளை பதிவு செய்தனர். இவர்களைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜபட்ச 167 ஆவதாக தனது வாக்கை பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து 205 ஆவதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது வாக்கை பதிவு செய்தார்.இந்த தேர்தலில் அகில இலங்கை தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கரேந்திரன் ஆகிய இரண்டு பேர் மட்டும் வாக்களிப்பை புறக்கணித்தனர்.சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற வாக்குப் பதிவு 11.50 மணியளவில் முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.ரணில் விக்ரமசிங்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோவும், டலஸ் அழகம்பெரும வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிக்க டிலான் பேரேராவும், அனுர குமார வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிக்க விஜித ஹேரத்தும் நியமிக்கப்பட்டனர்.வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவடைந்ததும், நாடாளுமன்ற செயலாளர் முடிவுகளை அறிவித்தார்.அதன்படி, மொத்தம் 223 வாக்குகளில் 219 வாக்குகள் செல்லுபடியான வாக்குகள் என்றும், 4 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.செல்லுபடியான 219 வாக்குகளில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று இடைக்கால அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.அழகம் பெரும 82 வாக்குகளையும், அனுர குமார 3 வாக்குகளையும் பெற்றனர்.1993 மே நாளான்று அப்போதைய அதிபர் ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்டதை அடுத்து, அன்றைக்கே பண்டார விஜதுங்க பதவி பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1993 மே 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக இடைக்கால அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.அன்று பண்டார விஜதுங்கவைத் தவிர வேறு யாரும் களமிறங்காததால், வாக்கெடுப்பின்றி அவர் இடைக்கால அதிபராக தேர்வு செய்யப்படார்.ஆனால், இந்த முறை 3 பேர் அதிபர் வேட்பாளர்களாக களமிறங்கியதால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இடைக்கால அதிபர் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின்படி, இடைக்கால அதிபராக தேர்வு செய்யப்பட்ட முதல் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க என்பது குறிப்படத்தக்கது.6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான நவம்பர் 2024 வரை அதிபராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து செயல்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *