இலங்கையில் மீண்டும் ஊரடங்கு? அரசு தரப்பில் உயர் மட்ட ஆலோசனை என தகவல்.!!

கொழும்பு,இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது.எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன.பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையில் ஆளும் ராஜபக்சே குடும்பமே காரணம் என குற்றம் சாட்டும் பொதுமக்கள் அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அதிபர் மாளிகை எதிரே இன்று 9-வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவது அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்த பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்து விட்டனர். அரசாங்கத்தில் ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர்.ஏற்கனவே நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிபர் மாளிகை முற்றுகை போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அதிபர் மாளிகை முன்பு ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 7 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்க அரசு தரப்பில் உயர் மட்ட ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் தேக்க நிலை நீடித்துவரும் நிலையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *