இருளர் குடியிருப்புகளை தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை; 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி.!

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகேயுள்ள ஊத்துக்காடு பகுதியில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 76 பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குடியிருப்பும் 4.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமான பணிகளைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஆர்த்தி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருந்ததை கண்டு கோபமடைந்த மாவட்ட ஆட்சியர், ஒப்பந்ததாரர் பாபுவை நேரில் அழைத்து கடுமையாகப் பேசி எச்சரிக்கை விடுத்தார். ஏழைகளுக்காகக் கட்டப்படும் குடியிருப்பு இப்படித் தரமற்ற முறையில் கட்டுவது எப்படி நியாயம்?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், `கட்டுமானப் பணிகள் தரமான முறையில் நடைபெறவேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதேபோன்று பணிகளைத் தொடர்ந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதுடன், லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் தெரிவிக்க நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, தரமற்ற வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரிடம் அறிவுறுத்தினார். இந்த விவகாரத்தில், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகிய இருவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு மேலும் மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *