
கோவை: இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது ஒருவருக்கொருவர் கத்தியால் குத்திக்கொண்டதில், ஆடவர் ஒருவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட சிலருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ் தரப்பினர் உக்கடம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.

அப்போது அங்கு வந்த முத்துப்பாண்டி தரப்பினர், திடீரென சந்தோஷ் உள்ளிட்டோரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.அடுத்த சில நிமிடங்களில் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது முத்துப்பாண்டி தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கத் தொடங்கினர்.இதில் சந்தோஷ், சுரேஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முத்துப்பாண்டி தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடினர்.படுகாயம் அடைந்த சந்தோஷ், சுரேஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த மோதலும் படுகொலையும் நிகழ்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.சுரேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தப்பி ஓடிய முத்துப்பாண்டிக்கும் அவரது நண்பர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.