
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து, இந்தித் திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதில் முக்கியமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசானது, இந்தி மொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி, கல்வி மூலமாகத் திணிப்பதுவரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள்.
2. ‘இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படாது. அவர்கள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும்’ என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த உறுதிமொழிதான் இன்றுவரை இந்தி பேசாத பெரும்பான்மை மக்களைக் காக்கும் அரணாக இருக்கிறது.
3. இந்தி மொழி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மற்ற மாநில மொழிகளின் தினம் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் என்பது, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக மட்டுமில்லை; அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்தியும், ஆங்கிலமும்தான் அலுவல் மொழியாக இத்தனைகாலம் இருந்து வரும் நிலையில், ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு.
4. நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக்கழகங்களில், கேந்திரிய வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும்; போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும்; இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்; ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்திமொழி அறிவை உறுதிசெய்ய வேண்டும்; ஒன்றிய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள்; கடிதங்கள் போன்றவை இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் மூலமாக தெரிய வருகிறது. முழுக்க முழுக்க இந்தியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் அறிக்கையாக இது அமைந்துள்ளது.
5. கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் ஐ.ஐ.டி வரை இந்தி மட்டும்தான் என்றால், மற்ற மொழி மக்களுக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை முற்றிலுமாக தடுப்பதன் மூலமாக, ஆங்கில அறிவையே முற்றிலுமாகத் தடுக்கிறார்கள்.
6. அனைத்துத் தேர்வுகளிலும் கட்டாய ஆங்கிலமொழி வினாத்தாள் இருப்பதைக் கைவிடச் சொல்வதன் மூலமாக, அனைத்து இந்தியத் தேர்வுகளையும் இந்திமயமாக்கத் துடிக்கிறார்கள் என்பதே தெரிகிறது. இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசுப் பணி பெறமுடியாத வகையில் இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்று கருத வேண்டி உள்ளது. இனி நடக்கும் அனைத்துத் தேர்வுகளும் இந்தியில்தான் என்று சொல்வதன் மூலமாக, இந்தி பேசும் மாநில மக்களுக்கு மட்டும்தான் இனி அனைத்திந்திய பணி இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.
7. 1968, 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதனடிப்படையிலான விதிகளின்படி மத்திய அரசுப் பணிகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அறிவியல் வளர்ச்சியையும் தொழில்நுட்ப வசதிகளையும் கவனத்தில் கொண்டு, எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்திக்கு இணையான அலுவல் மொழியாக்குவதே மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
8. தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்பது, தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை. தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும். மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக வேண்டும். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி எந்த வகையிலும் திணிக்கப்படக் கூடாது. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும்.
9. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியது.
10. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9-9-2022 அன்று குடியரசு தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது.