
மத்தியபிரதேசம்: குவாலியரில் உள்ள இந்திய விமானப் படையின் விமான தளத்திலிருந்து, இன்று காலை வழக்கமான பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகை போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, இந்த இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து மத்திய பிரதேச மாநிலம் மொரேனா அருகே நடந்துள்ளது.வழக்கமான பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் இந்திய விமானப் படை விமானி ஒருவர் பலியானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.”குவாலியரில் இருந்து காலையில் புறப்பட்ட மிராஜ் மற்றும் சுகோய் விமானங்களில் மொத்தம் மூன்று விமானிகள் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு விமானியின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன,” என்று மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் மாவட்ட எல்லையில் நடந்த இந்த விபத்தில், விமானத்தின் சில பாகங்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேசிய பரத்பூர் டி.எஸ்.பி, “காலை 10-10.15 மணியளவில் விமான விபத்து பற்றிய தகவல் கிடைத்தது. இங்கு வந்த பிறகு, அது இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு காணப்படும் பாகங்களை வைத்து, இது போர் விமானமா அல்லது சாதாரண விமானமா என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை.”இந்த விபத்து குறித்த தகவலை இந்திய விமானப் படை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் பதிவில், விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.விமான விபத்து தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதற்கட்ட தகவல்களை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் கேட்டு அறிந்து கொண்டதாகவும், தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கூறியுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.இன்று காலை நடந்த இந்த விபத்து குறித்து உள்ளூர் காவல்துறைக்கு 10 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இது தனியார் ஜெட் என தகவல் வெளியான நிலையில், விசாரணைக்கு பிறகு இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள் என தெரிய வந்துள்ளது.