
பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, “விண்வெளித் துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறது. விண்வெளித் துறையில் சிறந்து விளங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளது. 36 நாடுகளுக்குச் சொந்தமான 340 செயற்கைக் கோள்களை விண்ணில் நாம் ஏவியிருக்கிறோம். அடுத்தாண்டு நம் இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கைக் கோள்களை நாம் விண்ணில் செலுத்த இருக்கிறோம்.இந்தியாவின் துணைக் கோளான நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்கள்தான் மனிதர்கள் வாழ்வதற்கான அடுத்த வாய்ப்பாக இருக்க முடியும்.நம்முடைய கல்வி உலகளாவிய தேவைகளுக்காக இருக்க வேண்டும். கல்வி நிலையங்கள் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயம் முதல் விண்வெளி வரை ஏராளமான தொழில் வாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியும்.ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக நம் குலசேகரப்பட்டினத்தில்தான் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.

இது உலகிலேயே மிகச்சிறந்த ஏவுதளமாக இருக்கும். இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்று இஸ்ரோ சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு 1,200 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளது.மீதம் உள்ள நிலத்தை ஓரிரு மாதங்களில் ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளது. ஒப்படைக்கப்பட்ட பின்னர் கட்டுமானப் பணிகள் ஓரிரு ஆண்டுகளுக்குள் முடியும். முதலில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெறும்” என்றார்