
புதுடில்லி: இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கின்றது. அதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இரண்டு வகைப்படும். மேலும், அரசியல் கட்சிகள் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இந்த 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.