
ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 நாட்களாக உயிருக்கு போராடும் சிறுவனை மீட்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. மணப்பாறையில் 2019ஆம் ஆண்டு ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த பிஞ்சுக் குழந்தை சுஜித்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்திருக்க முடியாது. 68 அடி ஆழத்தில் விழுந்த சிறுவன் சுஜித்தை சுமார் 80 மணி நேரம் அனைத்து அரசு இயந்திரங்களும் போராடியும் காப்பாற்ற முடியாமல் போனது.இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் 9 வயது சிறுவன் ஹைதர் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். சிறுவன் விழுந்து 45 மணி நேரத்திற்கு மேலான நிலையில், குழந்தையை காப்பாற்ற மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தலிபான் வசமுள்ள ஆப்கனின் துணை பிரதமர் முல்லா அப்துல் கனியின் செயலாளர் அப்துல்லா அசாம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் மற்றும் இதர முதலுதவிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.சிறுவனின் குரல் தெளிவாகக் கேட்பதாகவும், சிறுவனின் தந்தை அவ்வப்போது பேசிக்கொண்டும் தைரியம் கூறிக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 25 மீட்டர் ஆழம் கொண்ட கிணற்றில் சரியாக 10வது மீட்டரில் சிறுவன் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை காப்பாற்ற வேண்டும் என ஆப்கன் மக்கள் தங்கள் பிரார்தனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.