
சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி தந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் எம்பி மனு தாக்கல் செய்துள்ளார். 75 ஆவது சுதந்திர நாள், விஜயதசமி, அம்பேத்கர் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு வரும் அக்டோர்பர் 2 ஆம் தேதி இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.அதனை ஏற்று, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு குரல்கள் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி தந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில், மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, பிரித்தாளும் கொள்கையை கொண்டது ஆர்எஸ்எஸ் கொள்கை. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.எனவே, வரும் அக்டோர் 2 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.