
புதுடில்லி: அரசின் மதுபான கொள்கையில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக, புதுடில்லி, பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.புதுடில்லியில் முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசு, கலால் கொள்கையில் திருத்தங்கள் செய்து, சமீபத்தில் புதிய மதுபான கொள்கையை அறிவித்தது. ஆனால், இந்தக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதற்காக பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, புதுடில்லி அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பாக விசாரணை நடத்த துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டார். இதைத் தொடந்து, புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு, பழைய கொள்கையே செயல்படுத்தப்பட்டது. மேலும், கலால் துறையில் 11 அதிகாரிகள் ‘பணிநீக்கம்’ செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை, ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, பலரிடம் விசாரணை நடத்தியது.இதற்கிடையே, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழிலதிபர் விஜய் நாயரை சி.பி.ஐ., சமீபத்தில் கைது செய்தது.இந்நிலையில் நேற்று புதுடில்லி, பஞ்சாப் மற்றும்தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் உட்பட 35 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.