ஆந்திராவில் புதிதாக 23 அமைச்சர்கள்- நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு?

திருப்பதி:ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது.அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கையில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார்.தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருந்தார்.

கொரோனா தொற்று காரணமாக அமைச்சரவை மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று அமராவதியில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தின் முடிவில் ஏற்கனவே கூறியபடி 24 அமைச்சர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெற்றுக் கொண்டார்.இதிலிருந்து கடந்த சுமார் 3 ஆண்டுகளில் மக்களுக்கு நன்கு சேவை புரிந்த 5 அல்லது 6 பேரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.மற்றவர்கள் கட்சி பணிகளில் ஈடுபட்டு அடுத்ததாக மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர பாடுபட வேண்டும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூட்டத்தில் கூறியதாக தெரிவித்துள்ளனர்.24 அமைச்சர்களிடமிருந்து பெற்ற ராஜினாமா கடிதங்கள் ஆளுநர் மாளிகைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை இரவுக்குள் ஆளுநர் ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.வரும் 11-ந்தேதி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் நகரி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *