“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் புறக்கணிக்கிறார்..” – அகில இந்திய எஸ்சி எஸ்டி கூட்டமைப்பு சார்பில் குற்றச்சாட்டு.!

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அகில இந்திய எஸ்சி எஸ்டி கூட்டமைப்புகளின் மகா சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது.

அகில இந்திய எஸ்சி எஸ்டி கூட்டமைப்புகளின் மகா சம்மேளனம் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சம்மேளனத்தின் மாநில தலைவர் கருப்பையா மனு கொடுத்துள்ளார். அதில் “சென்னை உயர்நீதிமன்றம், மதுரை பெஞ்ச் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு மொத்தம் 201 சட்ட அதிகாரிகள் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த 6 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கீழ் மட்டத்திலான வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கும் இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. 

சென்னை உயர்நீதிமன்றம் அதன் மதுரை கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரிகளாக, இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்ட சமூக வழக்கறிஞர்களை (அதாவது BC, MBC, SC, ST மற்றும் DNC) விட, இடஒதுக்கீடு இல்லாத சமூகங்களின் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது பிராமணர் அல்லாதவர்கள் பிராமணர்களுக்கான இடத்திலும் தலித்துகளுக்கான இடத்தில் தலித் அல்லாதவர்களும், இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கான இடங்களில் இடஒதுக்கீடு இல்லாத சமூகத்தினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது போலி சமூக நீதி. 07.12.2021 தேதியிட்ட RTI பதிலின்படி, இட ஒதுக்கீடு விதி எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 14.07.2021 தேதியிட்ட அறிவிப்புக்குப் பிறகு, எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்படவில்லை. ஆனால், மொத்தம் பெறப்பட்ட 2,485 விண்ணப்பங்களில் 201 சட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான தேர்வு முறை பின்பற்றப்படவில்லை. சட்ட அதிகாரிகளை நியமிப்பதற்காக எந்த குழுவும் அமைக்கப்படவில்லை.

11 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டிக்கு இடம் கிடைக்கவில்லை. எஸ்சி/எஸ்டிகளுக்கு 19% மற்றும் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசில் கொள்கை இருந்தும் வழங்கப்படவில்லை. அதேபோல கூட்டுறவு, விவசாயம்,தங்கம் மற்றும் சுயஉதவிக்குழு கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் தாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நேரடி தேர்தல் பதவிகளில் இடஒதுக்கீடு விதி பின்பற்றப்படும் போது 14,000 மறைமுக தேர்தல் பதவிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. 

துணை மேயர் முதல் கிராமப் பஞ்சாயத்து பதவிகள் வரை இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் 24 மாநில சொந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக, துணைவேந்தர்/பதிவாளர்/மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளராக பட்டியல் சாதியினர் யாரும் நியமிக்கப்படவில்லை. பல திறமையான நபர்கள் இருந்தாலும் நியமிக்கப்படவில்லை. குடியிருப்பு வீடுகள், வணிக கடைகள், நகராட்சியின் அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தில் நிர்வாகத் துறைகளிலும், எஸ்சி/எஸ்டியினருக்கு உரிய பங்கு வழங்க வேண்டும். 11.01.2022 அன்று தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலினிடம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உண்மையான சமூக நீதியை உறுதி செய்ய உங்கள் தலையீடு தேவை” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *