ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மத்திய அரசு தகவல்.!

புதுடெல்லி : நாட்டு மக்களுக்கு ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக திகழ்கிறது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது.இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஆதார் அட்டைதாரர்கள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதற்காக தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து, ‘அப்டேட்’ செய்ய வேண்டும்.அதன்மூலம், ஆதார் தரவுகளை சேமித்து வைக்கும் மத்திய அடையாள தரவுகள் சேமிப்பகத்தில், ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும்.இந்த பணியை ஆதார் அட்டைதாரர்கள் செய்வதற்காக, ‘மைஆதார்’ இணையதளத்திலும், ‘மைஆதார்’ செயலியிலும் ‘அப்டேட் டாக்குமெண்ட்’ என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. இதுதவிர, பக்கத்தில் உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்றும், ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.ஆதார் எண் வழங்கிய நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை இந்த ஆவணங்களை ஆதார் அட்டைதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த மாதம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதே கோரிக்கையை விடுத்திருந்தது. இப்போது, மத்திய அரசு, ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்து இந்த அழைப்பை விடுத்துள்ளது.இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்ட போதிலும், இவற்றில் எத்தனை எண்கள் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.இதுபோல், ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிப்பது பற்றி மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *