ஆதாருடன் பான் கார்டு இணைக்காவிட்டால் வரிச்சலுகை இல்லை: மார்ச் 31 கடைசி நாள் என அறிவிப்பு.!

புதுடில்லி: இதுவரை தனிநபர்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ள, 61 கோடி, ‘பான்’ எனப்படும் நிரந்தர கணக்கு எண்களில், 48 கோடி பேரின் எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. மார்ச் 31க்குள் மீதமுள்ளவர்கள் இணைக்காவிட்டால், வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சலுகைகளை அனுபவிக்க முடியாது,” என, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்தார். வருமான வரித்துறையால் வினியோகிக்கப்படும் 10 இலக்க எழுத்து மற்றும் எண்கள் உடைய அட்டை, ‘பான்’ எனப்படும்நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படுகிறது. கால அவகாசம் வங்கிக் கணக்கு துவங்குவது முதல், வருமான வரி தாக்கல் வரையிலான பல்வேறு நிதி நடவடிக்கைகளுக்கு நிரந்தர கணக்கு எண் அவசியமாகிறது. யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையத்தால் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த ஆதார் அட்டையுடன், நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் 31 கடைசி நாள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:தனி நபர்களுக்கான, 61 கோடி நிரந்தர கணக்கு எண்கள் இதுவரை வினியோகிக்கப்பட்டு உள்ளன இதில், 48 கோடி எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 13 கோடி எண்கள் இணைக்கப்படவில்லை. கடைசி நாளான மார்ச் 31க்குள் அவை இணைக்கப்பட்டுவிடும் என நம்புகிறோம். இந்த இணைப்புக்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த முறை நிச்சயம் நீட்டிக்கப்படாது. மார்ச் 31க்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் ஏப்., முதல் செயலற்றதாகிவிடும். வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சலுகைகளை அனுபவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். ஆதாருடன், நிரந்தர கணக்கு எண்ணை இணைக்காவிட்டால், என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:பான் அட்டை செயலற்றதாகி விட்டால், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள கணக்கு தாக்கல் நடைமுறை முடக்கப்படும். வருமான வரித்துறையிடம் இருந்து வரவேண்டிய தொகை கிடைக்காது. வரி பிடித்த விகிதம் அதிகரிக்கும். வங்கி உட்பட இதர நிதி சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *