ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு ஸ்ரீமதியின் தாய் மனுதாக்கல் ஜூலை 5-ந் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு.!

விழுப்புரம்: கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இந்த மாணவி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி பள்ளி விடுதியில் மர்மமான நிலையில் உயிரிழந்த கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தற்போது விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அவர் கடந்த 5-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி, இவ்வழக்கில் இருந்து ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரையும் விடுவித்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாகவும், அதற்காக குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு மனுதாக்கல் செய்தார்.

அதன்பேரில் அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதோடு மீண்டும் ஜூன் 21-ந் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது வழக்கறிஞர்கள் மோகன், ரத்தினம், பிரபு, லூசியா ஆகியோருடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அப்போது, குற்றப்பத்திரிகை நகலை முழுமையாக படித்து பார்த்து ஆட்சேபனை தெரிவிக்க ஏதுவாக கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொண்டு அதற்கான மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, 2 வார காலம் அவகாசம் வழங்கியதோடு மீண்டும் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *