
ஆடம்பரமாக உலா வந்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி பலரிடம் இருந்து கோடிக்காண ரூபாய் பணத்தை சுருட்டிய டுபாக்கூர் பெண் தொழிலதிபரை சென்னையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நடித்து ஏமாற்றிய பெண்ணின் பெயர் சுனிதா என்பதாகும். சென்னை போரூரில் வசித்து வருகிறார். பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளார். 34 வயதாகும் சுனிதாவிற்கு திருமணமாகி விட்டது. அவரது கணவர் பெயர் ரஞ்சித் குமார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயது மகளும் இருக்கிறார்.நடுத்த குடும்பத்தைச் சேர்ந்த சுனிதா கோடீஸ்வரி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக சதுரங்க வேட்டை பட பாணியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று சினிமா வசனத்தில் சொன்னது போல டிப் டாப் ஆக ஆடை உடுத்தி நகைகளைப் போட்டு வலம் வந்தார். தொழில் நிறுவனங்களை நடத்துவதைப் போல நம்ப வைத்து பலரிடம் பேசினார். போலியான நிறுவனங்களையும் நடத்தி வந்தார் சுனிதா.தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதை பல மடங்காக திருப்பித்தருவதாக சொல்லி பல பேரை சுனிதா ஏமாற்றினார். இவருடைய மோசடி வித்தையை நம்பி பலர் ஏமாந்தனர். அதில் ஒருவர் சீனிவாசன். தொழில் அதிபரான இவர், சவுதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களை நடத்திவருகிறார். கொரோனா காலத்தில் சென்னைக்கு வந்த இவர் தொழில் தொடங்க ஆசைப்பட்டார்.அவரது ஆசையை தெரிந்துகொண்ட சுனிதா, நண்பர் ஒருவர் மூலம் சீனிவாசனிடம் அறிமுகமானார். சுனிதாவின் அசத்தல் பேச்சை உண்மை என்று நம்பிய சீனிவாசன், சுனிதா சொன்ன போலி நிறுவனங்களில் கோடிகளை முதலீடாக கொட்டினார். வங்கிக் கணக்குகள் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டது.சுனிதாவின் போலி கம்பெனிகளில் ரூ. 12 கோடியே 50 லட்சம் முதலீடு செய்தார். 36 பவுன் நகைகளையும் சுனிதா வாங்கியதாக தெரிகிறது. சீனிவாசன் கொடுத்த பணத்தை பலமடங்காக திருப்பித்தருவதாக சொன்ன சுனிதா, கொரோனாவை காரணம் காட்டி நஷ்டக் கணக்கு காட்டி ஒரு சிறுதொகைகூட திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். பணத்தையும், நகைகளையும் சுனிதா அப்படியே சுருட்டிவிட்டார்.இதனையடுத்துதான் சுனிதாவின் மோசடி நாடகம் அம்பலமானது. சீனிவாசனைப் போல நிறைய பேரிடம் அவர் கோடிகளை முதலீடாகப் பெற்று மோசடி செய்ததை சீனிவாசன் கண்டுபிடித்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாசன், சுனிதா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.காவல்துறையினர் தேடுவதை அறிந்த சுனிதா தலைமறைவானார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுனிதாவை சென்னையில் கைது செய்தனர். மோசடி செய்த பணத்தை அவர் எங்கு பதுக்கி வைத்துள்ளார் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். சொந்த வீட்டையையும் அடமானத்தில் வைத்துள்ளாராம் சுனிதா. சுனிதாவிடம் ஏமாந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.