ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்; உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல; அமித்ஷா.!

புது தில்லி: நாட்டில், ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்க வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் பேசிய அமித் ஷா இவ்வாறு கூறியிருந்தார்.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் அலுவல் மற்றும் மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பு மொழியாக ஹிந்தியை அறிவித்துள்ளார். இதனால், ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் நிச்சயம் அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பேசிய அமித் ஷா, மத்திய அரசு வகுக்கும் 70 சதவீத கொள்கைகள் தற்போது ஹிந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.மத்திய அரசின் அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒற்றுமையை அதிகரிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. எனவே, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள பேசும் மொழிதான் இந்திய நாட்டின் மொழி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *