ஆஃப்கானிஸ்தான்: பள்ளிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்! -பெண் கல்விக்கு மீண்டும் தடை?

கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து பல கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆஃப்கானிஸ்தான் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் “பெண்களுக்கான அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.

பெண்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது எப்போதுமே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது” என்று கூறியது.இந்த நிலையில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அனைத்து மாணவிகளும் ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றபோது திடீரென பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் திறக்க அனுமதித்த முடிவை தாலிபன்கள் அரசு மாற்றியமைத்துள்ளது.அதன்படி, 6-ம் வகுப்பு மேல் படிக்கும் மாணவிகளின் கல்வி குறித்தும் அவர்கள் அணிய வேண்டிய சீருடைகள் குறித்தும் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கல்வி அமைச்சகத்தின் இந்த திடீர் முடிவு பெரும் குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. சில மாணவிகள் “மீண்டும் வகுப்பறைக்குத் திரும்புவது எவ்வளவு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது.

தற்போது அரசின் இந்த முடிவு ஏமாற்றமளிக்கிறது” எனக் கண்ணீர்விட்டு அழுதனர்.”அனைத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆறாம் வகுப்புக்கு மேல் மாணவிகளைக் கொண்ட பள்ளிகள் அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த தாலிபன் ஆட்சியில், பெண்கள் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனைத்து ஆண்களுக்கான பள்ளிகளுடன் பெண்களுக்கான ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டன.

ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகம், “தாலிபன்களால் அறிவிக்கப்பட்ட இன்றைய அறிவிப்பு பெரும் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. பெண்கள் பள்ளிகளை மூடுவது என்பது தாலிபன்களின் உறுதிப்பாடுகள் மற்றும் உறுதிமொழிகள் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது என அமெரிக்கா கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *