அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதி… கடைக்கு சீல்

புதுக்கோட்டை : அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி கடையை ஆய்வு செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.அறந்தாங்கி அருகே பிரியாணி சாப்பிட்ட கட்டிட தொழிலாளர்கள் 27 பேர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அறந்தாங்கி செந்தமிழ் நகரில் சித்திரவேல் என்பவரின் வீட்டு கட்டுமான பணியில் நேற்று கான்க்ரீட் போடப்பட்டது. இதனால் அங்கு பணிபுரிந்த கட்டிட தொழிலாளர்களுக்கு சித்திரவேல் பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார்.கான்கிரீட் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சாப்பிட முடியாததால் மாலை 5 மணிவரை வேலை முடிந்த பிறகு பிரியாணி பொட்டலங்களை தொழிலாளர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதில் சிலர் வீடுகளுக்கு பிரியாணியை எடுத்து சென்று சாப்பிட்டதாக தெரிகிறது.இரவில் பிரியாணியை குழந்தைகளோடு சாப்பிட்டு படுத்த சில மணி நேரத்தில் கட்டிட கூலித் தொழிலாளர்களுக்கு வாந்தி ,மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொருவராக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 வயது குழந்தை முதல் 27ழு பேர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் இதில் சிலர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில் நேற்று 27 பேர் பிரியாணி சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் 13 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொதுத்தேர்வு தயாராகி வரும் மாணவர்கள் சிலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.கட்டிட தொழிலாளர்கள் மட்டுமின்றி உறவினர்களுக்கும் சித்திரவேல் பிரியாணி வாங்கி தந்த நிலையில் மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைத்ததுடன் பயன்படுத்திய சிக்கன் பழையதா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *