
அருணாசலப் பிரதேசத்தில் 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது காமேங் செக்டர். இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்த நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட 7 ராணுவ வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவில் சிக்கி மாயமானார்கள். அதையடுத்து, ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினார்கள்.இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கி மாயமான 7 ராணுவ வீரர்களும் இறந்துவிட்டதாக இந்திய ராணுவம் தற்போது தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடின முயற்சிக்கு பின்பும், துர்திஷ்டவசமாக ஏழு வீரர்களையும் காப்பாற்ற முடியவில்லை.14,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவுடன் சீரற்ற காலநிலை காணப்படுகிறது. அதில் சிக்கி ராணுவ வீரர்கள் இறந்தது உறுதியாகியுள்ளது. ராணுவ வீரர்களின் உடல்கள் தற்போது பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சம்பிரதாயங்களுக்காகக் கொண்டு செல்லப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.