
பெரம்பலூர் மாவட்டம்: ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகள் விஜயலட்சுமி. இவர் அருகே உள்ள நக்க சேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், மாணவி விஜயலட்சுமி பள்ளிக்குச்செல்வதற்காக நக்க சேலம் வழியாக துறையூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி விஜயலட்சுமி பேருந்தின் உள்ளே செல்ல முடியாததால் முன்பக்க படியிலேயே தொங்கி சென்றிருக்கிறார்.பேருந்து நக்க சேலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது வேகத்தடை மீது ஏறி இறங்கியதில் மாணவி விஜயலட்சுமி எதிர்பாரா விதமாகப் பேருந்திலிருந்து தவறி விழுந்துள்ளார். அப்போது அதே பேருந்தின் பின்பக்க சக்கரம் மாணவி காலில் ஏறி இறங்கியுள்ளது.இதனால், மாணவி விஜயலட்சுமிக்குக் கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. மாணவி உடலிருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அருகிலிருந்தவர்கள் மாணவியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். விபத்து நிகழ்ந்தவுடன் அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். உறவினர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டம் ரத்து செய்யப்பட்டது. இவ்வழக்கு பாடாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
