அரசு பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டர்கள் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் தேர்வு தொடர்பாகச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகளை வெளியிட்டது.

இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் தான் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அதாவது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் என்ற அடிப்படையில் விண்ணப்பிக்க அனுமதித்த போதும், சம்பந்தப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை ஆண்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் போது, ஆண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும், பெண்கள் என அடையாளப்படுத்தும் போது பெண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையுடன், எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வுகளிலும், கட் ஆப் மதிப்பெண்களிலும் சலுகைகள் வழங்கக் கோரி சாரதா என்பவர் உள்பட மூன்றாம் பாலித்தவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்கள், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர்கள் அனைவரும் ஆரம்பக்கட்ட தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாகக் கருதி, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, எட்டு வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் எனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எதிர்காலத்தில், அரசுப் பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் குறிப்பிட்ட சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *