
பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள நஸ்ரிகஞ்ச் என்ற ஊரில் அமியவார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள அர்ரா கால்வாயின் குறுக்கே கடந்த 1972-ம் ஆண்டு ஒரு இரும்புப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீளம் மற்றும் சுமார் 500 டன் எடை கொண்ட அந்தப் பாலத்தில் பழுது ஏற்பட்டிருந்ததால், சமீபகாலமாக அது அதிகமாக பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று திரைப்பட பாணியில், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட மர்ம நபர்கள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பாலத்தைப் பழுது பார்க்க வந்திருப்பதாக பொதுமக்களிடம் அறிமுகமாகியிருக்கின்றனர். பின்னர், அந்தப் பாலத்தை கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து 3 நாள்கள் பெயர்த்தெடுத்து லாரியில் திருடிச் சென்றிருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், வந்திருப்பவர்கள் கொள்ளையர்கள் என்று தெரியாமல் அந்தப் பகுதி மக்களும் மூன்று நாள்கள் அவர்களுக்கு உதவியிருக்கின்றனர்.இருப்பினும், சந்தேகமடைந்த சிலர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், பாலம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.