
அம்பேத்கர், பகத் சிங்கின் கனவுகளை நனவாக்கி வருகிறோம் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டெல்லியில் செயல்படும் 240 அரசு பள்ளிகளில் 12,430 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் கேஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சில ஊழல்வாதிகள், என்னை தீவிரவாதி என்று விமர்சித்துள்ளனர். இந்த தீவிரவாதி இன்றைய தினம் 12,430 ஸ்மார்ட் வகுப்பறைகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன். இதன்மூலம் அதிகாரிகள், நீதிபதிகள், ரிக் ஷா தொழிலாளர்கள், சாமானிய தொழிலாளர்களின் பிள்ளைகள் ஒரே மேஜையில் அமர்ந்துகல்வி பயில வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.அம்பேத்கர், பகத் சிங்கின் கனவுகளை இந்த தீவிரவாதி நனவாக்கி வருகிறேன். கடந்த 7 ஆண்டுகளில் டெல்லியில் 20,000 வகுப்பறைகளை கட்டியுள்ளோம். மற்ற மாநிலங்களைவிட அதிக வகுப்பறைகளை கட்டி சாதனை படைத்துள்ளோம்.நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது.

ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளின் கல்வித் தரம்மோசமாக உள்ளது. அந்த நிலையை ஆம் ஆத்மி அரசு மாற்றியுள்ளது.அம்பேத்கரின் கனவின்படி டெல்லி அரசு பள்ளிகளில் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்வி கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. நாங் கள் பள்ளிகளை கட்டவில்லை. தேசபக்தர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளை கட்டி வருகிறோம்.பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அல்லது பாஜக அரசுகள் தங்கள் மாநிலங்களில் கல்வியின் தரத்தை உயர்த்த விரும்பினால் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை அணுகலாம். இதேபோல அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த விரும்பினால் டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் ஆலோசனை பெறலாம்.தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது லட்சியம் கிடையாது. நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். எங்களது ஆக்கப்பூர்வமான திட்டங்களால் ஆம் ஆத்மிக்கு வாக்குகள் கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.