அமைச்சர் மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் தற்கொலை; போலீஸ் தீவிர விசாரணை!!

கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பா.ஜ.க-வின் உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீலின் சடலம் இன்று (ஏப்ரல் 12) உடுப்பியில் உள்ள விடுதியில் கண்டெடுக்கப்பட்டது.பெலகாவியில் உள்ள ஹிண்டலகாவைச் சேர்ந்த சந்தோஷ், கடந்த திங்கள்கிழமை முதல் காணவில்லை. அதன் பின்பு வந்த தகவலின் அடிப்படையில் உடுப்பியில் உள்ள விடுதியில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை விசாரணையில், “நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன், எனது மரணத்திற்கு ஆர்.டி.பி.ஆர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மட்டுமே காரணம்.எனது ஆசைகளை ஒதுக்கி வைத்து இந்த முடிவை எடுக்கிறேன். எனது பிரதம மந்திரி, முதல்வர், நமது அன்புக்குரிய லிங்காயத் தலைவர் பி.எஸ்.ஒய் மற்றும் அனைவரும் என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவரது செல்போனிலிருந்து மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பா.ஜ.க-வின் ஆர்.டி.பி.ஆர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ” என் மீது குற்றம் சாட்டியவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். அவர் நீதிமன்றத்தில் போராடியிருக்க வேண்டும், அவரது தற்கொலைக்கும் எனக்கும் எந்த இடத்திலும் தொடர்பில்லை. நான் அவரைச் சந்திக்கவில்லை. இவரின் மரணத்தை முன்வைத்து சிலர் நான் ராஜினாமா செய்ய வேண்டும் எனப் போராடுகிறார்கள். நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை” என்று கூறினார்.இதற்கிடையில், இந்தச் செய்திக்கு எதிர்வினையாற்றும் வகையில், சிவமோகாவில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. சந்தோஷ் பட்டீல் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கர்நாடகாவில் பா.ஜ.க அரசு ஒப்பந்ததாரர்களிடம் அதிக லஞ்சம் கேட்பதாகவும், ஊழல் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டிய பல ஒப்பந்ததாரர்களில் சந்தோஷ் பட்டீலும் ஒருவர். அரசு திட்டப்பணிகளுக்கான தொகையை ஈஸ்வரப்பா ஊழல் செய்துவிட்டார் எனக் கூறிய சந்தோஷ் பட்டீல் மீது அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அவதூறு வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தற்கொலையா? அல்லது திட்டமிட்ட கொலையா என காவல்துறை தீவிரமாக விசாரித்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *