அமெரிக்க நகரங்களில் தமிழ் பாரம்பரிய மாதமாக ஜனவரி அறிவிப்பு..!

அமெரிக்காவின் 4 முக்கிய நகரங்களில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ் வழி வந்தவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவுக்கு முக்கிய பங்களிப்பை செய்துள்ளனர். முக்கியமாக சுந்தர் பிச்சை, கமலா ஹாரிஸ், இந்திரா நூயி, விஜய் அமிர்தராஜ், சி.கே.பிரகலாத், மிண்டிகெய்லிங் ஆகியோர் பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.குறிப்பாக கலிஃபோர்னியா மாகாணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்தோர் சுமார் 60,000 பேர் வசிக்கின்றனர். அவர்களுக்காகவும், தமிழின் சிறப்பை அங்கிருப்பவர்களை அறியச் செய்யும் வகையிலும் சாக்ரமென்டோ தமிழ் மன்றம் செயல்படுகிறது. இம்மன்றம் பரிந்துரைத்தலின்பேரில், ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக கலிஃபோர்னியா மாகாணத்தின் முக்கிய நகரங்களான போல்சோம், ரோஸ்வில், ராக்லின், ரான்சோகோர்டோவா ஆகியவற்றின் மேயர்களால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தமிழ் மக்களின் அனைத்து சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் எடுத்துக் கூறும் வகையில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் செழுமையைக் கொண்டாடுதல், உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் பாரம்பரியங்கள், கலைகள் மற்றும் கலாசாரங்களைக் கொண்டாடுதல், தமிழ் மக்களின் மொழி, மரபுகள் மற்றும் வரலாறு பற்றிய அனைத்து பின்னணியிலும் உள்ளதைக் கற்பித்தல், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றிய சாதனைகளை எடுத்துரைத்தல், தமிழர்களின் வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னெடுத்தல் ஆகியவையே தமிழ் பாரம்பரிய மாதத்தின் நோக்கங்களாகும்.சாதனைகளை அங்கீகரித்து, நமது வேர்களைக் கண்டறியும் அதே வேளையில், தமிழர்களின் வரலாற்றைக் கொண்டாட தமிழ் பாரம்பரிய மாதம் வாய்ப்புகளை வழங்கும். தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவதையொட்டி, ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதமாக பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *