அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி நேரில் ஆஜர் – நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.இதையடுத்து மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிசார் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று இரவு காங்கிரஸ் மூத்த தலைவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அவரது வீட்டில் அவசர கூட்டம் நடந்தது. இதில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் சோனியா காந்திக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்றும் டெல்லியில் மிகப்பிரமாண்டமான அளவில் தர்ணாவில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. போராட்டம் நடத்த டெல்லியில் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.இதை ஏற்று ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள், மகளிர் அணியினர், மாணவர் அமைப்பினர் இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக டெல்லியில் திரண்டனர். அவர்கள் அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் தர்ணா நடத்தினார்கள்.

கட்சி அலுவலக வளாகத்தில் அவர்கள் வெள்ளை உடை அணிந்து தலையில் குல்லாவுடன் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் போட்டனர். சோனியாவுக்கு ஆதரவாகவும் அவர்கள் குரல் எழுப்பினார்கள். இதில் ஏராளமான பெண் தொண்டர்களும் பங்கேற்றனர்.பின்னர் அவர்கள் அங்கிருந்து அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.இதனால் அந்த அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலையில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.காங்கிரஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உலக வரலாற்றையே மாற்றிய குடும்ப பின்னணி கொண்ட சோனியா காந்தியை அமலாக்கத்துறை அச்சுறுத்த முடியுமா? என குறிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த மாதம் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானபோது காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *