
விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூரில், ‘நல்ல சமேரியர் சாரிட்டபிள் டிரஸ்ட்’ சார்பில் அனுமதியின்றி இயங்கி வந்த காப்பகத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.இதையடுத்து, நடந்த விசாரணையை அடுத்து, காப்பகத்தின் நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா, மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 6 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் ஜூபின்பேபி, மரியா, பிஜூமோன், சதீஷ், அய்யப்பன், கோபிநாத் ஆகிய 6 பேரை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றனர். பிறகு அவர்கள் 6 பேரையும், விழுப்புரம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் கைதான, காப்பக மேலாளர் பிஜூமோன், காப்பக பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத் ஆகிய 3 பேரின், நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து 3 பேரும், விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, காப்பக மேலாளர் பிஜூமோன் உட்பட 3 பேருக்கும், ஏப்ரல் 11ம் தேதி வரை 14 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.