அதிமுக ஆதரவு… பாஜக வெளிநடப்பு : மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு எதிராக பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!!

சென்னை : மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்ததீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, முன்னதாக தீர்மானம் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மொத்த மாணவர்களில் 80%க்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் பயில்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவினரை சேர்ந்தவர்கள். CUET நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறையும். சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கிடாமல் நுழைவுத் தேர்வு மார்க்கை கணக்கில் கொள்வது ஏற்புடையதல்ல.நுழைவுத் தேர்வால் பள்ளிக்கல்விமுறையை ஓரம்கட்டி விட்டு பயிற்சி மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்படும்.பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும். CUET நுழைவுத் தேர்வு முறையும் நீட் தேர்வைப் போன்று பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக குறைகிறது. நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு வைப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்,’ என்றார்.முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தது.தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்: CUET தேர்வு பெயரில் வேண்டுமானால் க்யூட்டாக இருக்கலாம்; ஆனால், இது க்யூட் தேர்வு கிடையாது; நமது மாணவர்களை உயர்கல்விக்கு தடுக்கும் செயல்.கொங்குதேச மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் : பொது நுழைவுத் தேர்வுகள் மாணவர்களை கட்டுப்பாடற்ற தலைமுறையை உருவாக்கிவிடும்.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா : கல்வித்துறை மீது துல்லிய தாக்குதல் நடத்துகிறது ஒன்றிய அரசு.மார்க்சிஸ்ட் உறுப்பினர் சின்னத்துரை : விளிம்புநிலை, ஏழை மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தளி ராமச்சந்திரன்: பொது நுழைவுத் தேர்வை கொண்டு வந்து கிராமப்புற மாணவர்களின் கனவை ஒன்றிய அரசு சிதைகிறது.அதிமுக உறுப்பினர் அன்பழகன் : மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படைவார்கள்.நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. CUET ரத்து செய்யவிட்டால் வரும் காலங்களில் அனைத்து பல்கலை.யிலும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகிவிடும்பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் : முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம்.இதைத் தொடர்ந்து மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு எதிராக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *