
விழுப்புரம்: கண்டமங்கலத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் உருவப்படத்திற்கு செம்புள்ளி கரும்புள்ளி வைத்து அவரது உருவப்படத்துடன் அண்ணா சிலை மீது மாட்டி விட்டு அண்ணாவின் தலை பகுதியில் திமுக கட்சிக் கொடியைக் கொண்டு மூடிவிட்டுச் சென்றுள்ளனர். அதிகாலையில் அண்ணா சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து இருப்பதைக் கண்ட அப்பகுதியினர் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அண்ணா சிலை மீது இருந்த செருப்பு மாலையையும் ஆ. ராசாவின் புகைப்படத்தினை அகற்றினர். இதனிடையே, இச்சம்பவம் குறித்த தகவல் தீயாக பரவியதால், திமுகவினர் அங்கு குவிந்தனர். பின்னர் அவமதிக்கப்பட்ட அண்ணாவின் சிலை முன்பு திடீரென திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்தவர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார் அண்ணா சிலையை அவமதிக்கும் விதமாகச் செருப்பு மாலை அணிவித்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் புதுச்சேரி செல்லக்கூடிய முக்கிய சாலையான கண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலையை அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி அண்ணா சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கண்டமங்கலம் பாஜக ஒன்றிய செயலாளர் பிரகலாதன், பிரேம்குமார், அப்பு ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.