
காரைக்குடி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி இறந்து கிடந்த போது வெளிநாட்டில் பார்ட்டி கொண்டாடியவர் தான் நமது கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.எதற்கெடுத்தாலும் தமிழக அரசு மோடியை குறை சொல்வதிலேயே குறியாக இருக்கிறது என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் அப்போதிலிருந்தே தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டன காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 3 ஆயிரத்து 400 கிலோமீட்டர் நடை பயணத்தை தொடங்கி அதில் ஈடுபட்டு வருகிறார். இந்த வரிசையில் பாஜகவின் சார்பில் அதன் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். ஜேபி நட்டா தலைமையில் நேற்று இரவு காரைக்குடியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, திமுகவில் வாரிசு அரசியல் நடந்துவருவதாக விமர்சித்தார், தற்போது முதல்வராக ஸ்டாலின் உள்ளார், அடுத்து அவரது மகன் வருவார் இது என்ன மாதிரியான ஜனநாயகம் என கடுமையாக சாடினார். அதைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவையும் தமிழக முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் இருக்கிறோம், ஆடு மாடு வளர்த்து பால் கறந்து பிழைப்பு நடத்துகிறோம், இதுவரையில் ஆவினில் பால் விலை மூன்று முறை உயர்ந்திருக்கிறது, ஆனால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் விலையை அரசு ஒரே ஒருமுறை மட்டுமே உயர்த்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் பேசுகின்ற அனைத்துமே பொய், எதற்கெடுத்தாலும் மோடி ஐயா அவர்களை குறை சொல்வதே வாடிக்கையாக உள்ளது. ஏன் மின் கட்டணம் உயர்த்தினீர்கள் என்று கேட்டால் மோடி சொன்னார் என்கிறார்கள், மோடி10 ஆயிரம் நல்ல விஷயங்களை சொன்னார், ஆனால் அதில் ஒன்றையாவது செய்தீர்களா?கான்ட்ராக்ட் விட்டு அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மோடி சொன்னார் என்கிறீர்கள். சொத்து வரி 150 சதவீதம் உயர்ந்திருக்கிறது, இதையெல்லாம் மோடியா உயர்த்த சொன்னார், மோடி எங்கே சொன்னார், பொதுக்கூட்ட மேடையில் சொன்னாரா, லெட்டர் எழுதினாரா, போன் போட்டு சொன்னாரா, எப்படிச் சொன்னார்?மாநில அமைச்சர்கள் மத்திய அரசு நடத்தும் கூட்டங்களுக்கு செல்வதில்லை, ஆனால் இங்கு கள்ளக்குறிச்சியில் ஒரு மாணவி இறந்து கிடந்தால், வெளிநாட்டில் நமது கல்வி அமைச்சர் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கிறார், இதுதான் இன்றைய நிலைமை. நீண்ட நாளைக்கு ஆட்சி நீடிக்காது, அதிருப்தி என்பது கட்சிக்குள் வரப்போகிறது. எனவே முதல்வர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும், இவ்வாறு அண்ணாமலை பேசினார்.