அடுத்த 30 வருஷத்துக்கு பாஜக வின் தலைமையில் தான் இந்தியா; காங்கிரஸ் அதோ கதிதான்.. பிரசாந்த் கிஷோர் .!

மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.காங்கிரஸ் :திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோரை மீண்டும் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரஸில் இணையக்கூடும் எனத் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார்.கட்சியில் இணைவது பற்றி மட்டுமின்றி காங்கிரஸை பலப்படுத்துவது தொடர்பாகவும் அவர் கட்சித் தலைமைக்கு பரிந்துரை அறிக்கையை அளித்தார்.

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை விவாதிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜியா சிங், மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் சோனியா காந்தி அமைத்தார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மிஷன் 2024 திட்டத்தையும் அவர் முன் வைத்தார்.இதுபற்றி அந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற திடீர் என ஒப்பந்தம் செய்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரஷாந்த் கிஷோரும் தெரிவித்தார். காங்கிரஸில் சேரும் அவரது திட்டம் தோல்வியடைந்த நிலையில் பீகாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக மறைமுகமாக கருத்து தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்வீட் தெரிவித்தார்.இந்நிலையில் பிரபல நாளிதழின் தேசியக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்தவொரு விஷயமோ அல்லது கருத்தியலோ அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் அது சரிவை சந்திக்கும் என்பதுதான் விதி. எனவே பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என பலரும் கருதுகின்றனர். இதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்.பிரசாந்த் கிஷோர் :ஆனால் இந்த விஷயம் இப்போது உடனே நடைபெற்றுவிடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 வருடங்களுக்குள் நடைபெறாது. அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது. அதற்காக, இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என நான் கூறவில்லை.ஆனால், அடுத்த 20 – 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்திதான் இந்திய அரசியல் சுழலும் என்றுதான் கூறுகிறேன். இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால், நீங்கள் அடுத்த 20 – 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்க்க வேண்டும். மாறாக அக்கட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது என்ற சூழலே நிலவும். சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *