அஞ்சல் துறையில் பினாமி பெயர்களில் தேசிய சேமிப்பு திட்ட பத்திரங்களில் கோடிக்கணக்கில் பணம்.!

புதுடெல்லி: நாடு முழுவதும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் ஏராளமானோர் பணம் முதலீடு செய்திருப்பதை கண்டு பிடித்தனர்.இவர்களின் முகவரிகளை ஆய்வு செய்த போது அவற்றில் பலவும் போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த முதலீடுகள் குறித்த முழு விபரங்களையும் தபால் துறையிடம் கேட்டு வாங்கியது.

தபால் துறை அளித்த தகவல்களின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தபால் துறையின் சிறுசேமிப்பு திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களில் பலரும் தங்கள் குழந்தைகள் பெயரிலும், வீட்டில் வேலை செய்வோர் உள்பட பினாமிகள் பேரிலும் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.இது தொடர்பாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் பினாமி பெயர்களில் பலர் முதலீடு செய்துள்ளனர்.

குறிப்பாக ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.இவர்களில் முதல் கட்டமாக 150 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தபால் நிலையங்களிலும் முதலீட்டாளர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் ஆவணங்களை உடனே சரிப்பார்க்கவும் உத்தரவிட்டுள்ளோம், என்றார்.இந்த நடவடிக்கைக்கு பிறகு மேலும் பலருக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *