அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் மாலை சிலர், பிரியாணி சாப்பிட சென்றனர். அப்போது 2 பேர், நாட்டுக்கோழி பிரியாணியை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்த ஓட்டல் ஊழியரை வரவழைத்து சாப்பிட முடியாத அளவிற்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் பிரியாணி இருப்பதாகவும், சந்தேகம் இருந்தால் நீங்களே சாப்பிட்டு பாருங்கள் என்றனர். அவர்கள் கூறியபடி அந்த ஊழியரும் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தபோது அந்த பிரியாணி கெட்டுப்போயிருந்ததாக கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கிருந்த ஓட்டல் உரிமையாளரிடம் சென்று கெட்டுப்போன பிரியாணியை எப்படி பொதுமக்களுக்கு விற்பனை செய்வீர்கள் என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

இந்நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் பரிந்துரையின்பேரிலும் விழுப்புரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் ராஜரத்தினம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புபழனி, கதிரவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அசைவ ஓட்டல்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள அசைவ ஓட்டல்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். அதோடு தரமற்ற முறையிலும் நிறமேற்றப்பட்ட வகையிலும் இருந்த 10 கிலோ கோழி இறைச்சியையும் அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் 5 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்பிரிவின் கீழ் நோட்டீசு வழங்கினர்.

எச்சரிக்கை

இது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ஓட்டல்களில் தரமற்ற முறையிலும், கெட்டுப்போன உணவையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *